UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:40 AM

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் ஒட்டுமொத்த தற்கொலை நிகழ்வுகளை விஞ்சும் வகையில், இந்தியாவில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் ஆண்டுதோறும் அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையிலான சமீபத்திய அறிக்கை ஒன்று, ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவிகிதம் அதிகரித்து வரும் நிலையில், மாணவ, மாணவிகளின் தற்கொலை வழக்குகள் மட்டும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஒட்டுமொத்த மாணவர்களின் தற்கொலைகள் கடந்த 2021 மற்றும் 2022க்கு இடையிலான காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்து, 53 சதவிகிதமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் மாணவிகளின் தற்கொலைகள் 7 சதவீதம் அதிகரித்துள்ளன.
கடந்த பத்தாண்டுகளில், மக்கள் தொகை 0-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 582 மில்லியனில் இருந்து 581 மில்லியனாக குறைந்துள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் தற்கொலை எண்ணிக்கை 6,654 இலிருந்து 13,044 ஆக அதிகரித்துள்ளது மிகவும் கவனத்திற்குரியது!