பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 05:39 PM

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
கைது
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு, உறவினர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
விசாரணை
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுத அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்த மாணவி அஜ்மீர் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்துள்ளார்.
அந்த ஆணையத்தின் தலைவி அஞ்சலி ஷர்மாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பாதிக்கப்பட்ட நான், பள்ளிக்கு சென்ற போது, சூழ்நிலை கெட்டு விடும். இதனால் வீட்டில் இருந்தே பாடம் படிக்கும்படி நிர்வாகம் கூறியது. இதனை ஏற்றுக் கொண்டேன். பிளஸ் 2 தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வாங்க சென்ற போது, பள்ளி மாணவிகள் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி நுழைவுச்சீட்டு இல்லை என தெரிவித்துள்ளார்.
அப்போது தான், மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக மறைமுகமாக அந்த மாணவியை பள்ளியில் இருந்து நீக்கியது தெரியவந்தது எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக, குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.