அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை துவக்கி வைத்த துணை முதல்வர்
அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை துவக்கி வைத்த துணை முதல்வர்
UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 12:24 PM

சென்னை:
தமிழ்நாட்டில் புத்தமை அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அறிவுசார் சக்தி மையம்: தமிழ்நாட்டை இந்தியாவின் புதுமை தலைநகராக மாற்றுதல் என்ற கருப்பொருளில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில், மாநிலம் முழுவதும் இருந்து 16 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வெளிப்படுத்தினர். 5 தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு விதை நிதி காசோலைகளை துணை முதலமைச்சர் வழங்கினார். ஆராய்ச்சியாளர்களுடன் நேரடியாக உரையாடிய அவர், டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி தமிழ்நாட்டின் பயணத்தில், இளம் புத்திசாலிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனக் கூறினார்.
நான்கு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இடையே நிகழ்வில் கையெழுத்தாகின. மேலும், ஐடிஎன்டி மையம், ஏஎஸ் எம் இ, என் ஆர்டிசி,சி-டாக் பெங்களூரு, போஷ், மஹிந்திரா & மஹிந்திரா, மற்றும் ஐ-ஸ்டெம் ஆகிய ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பரிமாறிக்கொண்டது.
மாநாட்டின் முக்கிய அம்சமாக, ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற மாஸ்டர் வகுப்புகளில் 270 பேர் பங்கேற்றனர். இதில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகள் உள்ளிட்ட பயனுள்ள தலைப்புகள் இடம் பெற்றன.
மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன், அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னித், ஐடிஎன்டி தலைமைச் செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், மற்றும் துறையின் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.