மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்க டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம்
மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்க டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம்
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:45 PM

கோவை:
கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், காவல்துறையின் சிக்னல்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களை ஒருங்கிணைக்கும் வகையில், தனியார் பங்களிப்புடன், ரூ.10.50 கோடியில், டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம் உருவாக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், ஓரிடத்தில் இருந்து கொண்டு, சக அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அறிவுறுத்தல் மற்றும் கட்டளைகள் வழங்குவதற்கு ஏதுவாக, டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் என்பது, டிஜிட்டல் தரவுகளை ஆப்டிகல் பைபர் மூலம் ஒளியின் உதவியுடன் கடத்தும் தொழில்நுட்பம். கோவை மாநகராட்சி நடத்தும் பள்ளிகள், நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிரதான அலுவலகங்களில், டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 3.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், அரசு பங்களிப்பு ரூ.1.27 கோடி; பொதுமக்கள் பங்களிப்பு ரூ.2.58 கோடி.
இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 சிக்னல்கள், 716 முக்கிய இடங்கள் மற்றும் மாநகர போலீஸ் அலுவலகங்களில் டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம் மற்றும் உள்கட்டமைப்பு பணி ஏற்படுத்த, 6.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பங்களிப்பு ரூ.2.22 கோடி, பொதுமக்கள் பங்களிப்பு ரூ.4.53 கோடி. இவ்விரு பணிகளையும் ரூ.10.60 கோடியில் செய்வதற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
அலுவலகத்தில் இருந்தபடி பேசலாம்
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, தேசிய தகவல் மையம் போல் சிறிய அளவில் ஒரு கட்டமைப்பு ஏற்படுத்துகிறோம். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநகராட்சி பள்ளிகளையும், அலுவலகங்களையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்க முடியும். சிசி டிவிக்கு இணைப்பு கொடுத்து நேரடியாக பேசலாம். இதேபோல், காவல்துறையிலும், சிக்னல்களுக்கு அறிவுறுத்தல் வழங்கலாம் என்றார்.