பெண்கள் முன்னேற்றம் இதய துடிப்பு மாதிரி: முதல்வர் ஸ்டாலின்
பெண்கள் முன்னேற்றம் இதய துடிப்பு மாதிரி: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:47 PM

சென்னை:
மாணவர்கள் முன்னேற்றம் கண்கள் மாதிரி. பெண்கள் முன்னேற்றம் இதய துடிப்பு மாதிரி என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஜாதி என்ற ஆயிரமாண்டு அழுக்கை போக்கியவர் அம்பேத்கர். மக்கள் மனதில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூக மாணவர்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது.
மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாணவர்கள் முன்னேற்றம் கண்கள் மாதிரி. பெண்கள் முன்னேற்றம் இதய துடிப்பு மாதிரி. கல்வி, அரசியல், அதிகாரம் எல்லாம் ஜனநாயகம் ஆகிவிட்டது. அனைவரும் தமிழர் என்பதை உணர வைக்க பாடுபட்டு கொண்டு இருக்கிறோம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க., என்றும் துணை நிற்கும். சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. ஆதி திராவிட மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். சமூக சமத்துவத்தை நிலைநாட்ட இன்னும் நெடு பயணம் செல்ல வேண்டி உள்ளது.
இவ்வாறு முதலவர் ஸ்டாலின் பேசினார்.