பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி திட்டம்... துவக்கம்: வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி திட்டம்... துவக்கம்: வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜன 21, 2026 04:51 PM
ADDED : ஜன 21, 2026 04:52 PM

புதுச்சேரி: கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய 'டிஜிட்டல் பயிற்சி திட்டத்தை' அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று துவக்கி வைத்தார்.
முதல்வர் ரங்கசாமி கடந்த 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், பட்டதாரிகளுக்கு ஐ.டி., துறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு சார்பில் 'டிஜிட்டல் பயிற்சி திட்டம்' துவங்கப்படும் என, அறிவித்தார்.
அதன்படி பொறியியல் பட்டதாரிகளுக்கு நேரடி நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்கு, மாநிலத்தில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுடன் இணைந்து அரசு சார்பில் 'டிஜிட்டல் பயிற்சி திட்டம்' துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகையுடன், ஆண்டிற்கு 150 பேருக்கு மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் அடையாள எண் அல்லது மத்திய அரசின் 'உதயம்' பதிவு பெற்ற முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் நேரடியாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
கல்விப்புலத்திற்கும், தொழில்முறைத் தேவைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கடந்த 2023, 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்பத்தில் 60 சதவீத மதிப்பெண் அல்லது 6 சி.ஜி.பி.ஏ.,வுடன் பட்டம் பெற்று, புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் விண்ணப்பித்தவர்களை, இத்திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் தேர்வு செய்ததும், அவர்களுக்கு அரசு சார்பில், பணி ஆணை வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி முடித்ததும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற நிறுவனத்திலோ அல்லது பிற நிறுவனங்களிலோ பணியில் சேரலாம்.
இந்த 'டிஜிட்டல் பயிற்சி திட்டம்' குறித்த வழிகாட்டுதல் மற்றும் விண்ணப்பத்திற்கான லிங்க் (https://digitalinternship.py.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் சேர நேற்று முதல் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்கப்படும். 150 இடங்கள் மட்டுமே உள்ளதால், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதில் தேர்வானவர்களின் பட்டியல் பிப்., 2ம் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி பிப்., 4ம் வாரத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

