UPDATED : ஜன 21, 2026 04:52 PM
ADDED : ஜன 21, 2026 04:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், ருமேனியா பாபேஷ் - போல்யாய் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம், சமத்துவம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்ற அடிப்படையில், ஆராய்ச்சி மற்றும் துணை வளப்பகிர்வு, மாணவர் - ஆசிரியர் பரிமாற்றங்கள், பல்துறை கல்விசார் இணை நிகழ்வுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, பேசுகையில், 'எதிர்கால கல்வி முயற்சிகளில் இரு நிறுவனங்களுக்கு இடையேயான வளங்கள் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம் மூலம், இந்த ஒப்பந்தம் தனித்துவம் கொண்டதாக அமையும்.
மேலும், 51 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 110க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன், புதுச்சேரி பல்கலைக்கழகம் உயர்கல்வியில் தனது கூட்டாண்மை அணுகுமுறையிலிருந்து பெரும் பலன்களை பெற உள்ளது' என்றார்.
பாபேஷ் - போல்யாய் பல்கலைக் கழகத்தின் சர்வதேச கூட்டுறவு இயக்குநர் செர்ஜியு மிஸ்கோயு இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படும், என்றார். பாபேஷ் - போல்யாய் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுகள் இயக்குநர் மிஹேலா க்லிகோர், பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார், புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் லகிமாய் மிலி, பல்கலைக் கழக ஆங்கில துறை தலைவர் பினு ஸகாரியா, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், ருமேனிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

