UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:50 AM

இலவச கையேடு
நீட் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிய உணவு, ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் நீட் தேர்வினை எதிர்கொள்ளுவதற்கான பார்முலா,சமன்பாடுகள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.
மாணவர்கள் எளிதாக நீட் தேர்வு எழுத ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் தேவையான உதவிகளையும் செய்திருந்தனர்.
நீட் தேர்விற்கு இதை கொண்டு போகாதீங்க
நீட் தேர்வு மையத்திற்குள் மாணவ மாணவிகள் வாட்ச் அணிந்து வரக் கூடாது. மொபைல் போன் எடுத்து வரக் கூடாது. வளையல், தோடு, மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள், ேஹர்பின், ேஹர் கிளிப் அணிந்து வர தடையுள்ளது.
இதுதொடர்பாக தினமலரில் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில மாணவிகள், அதே தவறை செய்தனர். இவர்களுக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. தொடர்ந்து மாணவிகள் ேஹர்பின், ேஹர் கிளிப் ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு, நுழைவு தேர்வை எழுத சென்றனர்.
கடைசி நேர பதட்டம் வேண்டாமே
மாதிரி நீட் தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9.00 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடி வந்து தேர்வு எழுத வந்தனர். மாதிரி நுழைவுத் தேர்வு என்பதாலும், மாணவர்கள் இத்தேர்வு மூலம் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காகவும், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது.
ஆனால் இதே தவறை, மே 5ம் தேதி நடக்கும் நுழைவுத் தேர்விலும் செய்துவிட வேண்டாம். உரிய காலத்திற்குள் தேர்வறையில் இருந்தால் தான், இறுதி நேர பயம், படபடப்பில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக தேர்வெழுத முடியும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு
புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு கல்வித் துறை சார்பில் நீட் நுழைவு தேர்வினை எழுத பள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெறும் பள்ளிகளிலேயே தினமலர் - ஸ்பெக்ட்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வினை எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை வேண்டுகோள் விடுத்தது.
அதையடுத்து அரசு பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்ற ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லியனுார் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளி, மதகடிப்பட்டு கருணாநிதி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே நீட் மாதிரி நுழைவு தேர்வு நடத்த தினமலர் கைகொடுத்தது.
ஆல்பா மேல்நிலைப்பள்ளியில் விநியோகிக்கப்பட்ட அதே நீட் மாதிரி நுழைவு தேர்வு வினாத்தாள் அரசு பள்ளி மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மதியம் 1.20 மணி வரை நடந்தது. இந்த நுழைவு தேர்வினை ஆங்கிலத்தில் 450 பேரும்,தமிழில் 30 பேர் என 480 மாணவர்கள் ஆர்வமாக எதிர்கொண்டு எழுதினர்.
தேர்விற்கு முதலில் வந்த மாணவர்
நீட் மாதிரி நுழைவு காலை 10 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட் இருந்தாலும், முதலியார்பேட்டை பிராமினாள் வீதியை சேர்ந்த அரவிந்த், 18 தேர்வு மையத்திற்கு முதல் ஆளாக காலை 8 மணிக்கே வந்திருந்தார். பேட்ரிக் பள்ளியை சேர்ந்த அவர், தேர்வு துவங்கும் வரை ரிலாக்சாக பாடங்களை மீள்பார்வை செய்துக்கொண்டு இருந்தார்.
மாணவர் அரவிந்த் கூறும்போது, கடைசி நேர டென்ஷனை தவிற்க முன் கூட்டியே திட்டமிட்டு தேர்வறைக்கு வந்தேன் என்றார்.