'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' வினாடி வினா போட்டி குன்றத்துார் லிட்டில் ப்ளவர் பள்ளியில் கோலாகல தொடக்கம்: இந்தாண்டு 200 பள்ளிகளில் போட்டி நடத்த ஏற்பாடு
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' வினாடி வினா போட்டி குன்றத்துார் லிட்டில் ப்ளவர் பள்ளியில் கோலாகல தொடக்கம்: இந்தாண்டு 200 பள்ளிகளில் போட்டி நடத்த ஏற்பாடு
UPDATED : அக் 15, 2026 04:56 PM
ADDED : அக் 15, 2026 05:01 PM
சென்னை:
பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் எதிர்பார்த்து வரும், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடத்தப்படும், வினாடி வினா போட்டி, குன்றத்துாரில் நேற்று தொடங்கியது. எட்டாவது ஆண்டாக நடக்கும் இந்த போட்டிகளை, 200க்கும் அதிகமான பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவ மாணவியருக்கு, பாட தகவல்கள் மட்டுமின்றி பொது அறிவு, மொழித்திறனில் திறமையை வளர்க்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
'பட்டம்' இதழ் மாணவ மாணவியர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்மாணவர்களின் அறிவுத்தேடலை விசாலமாக்கும் வகையில், ஏழு ஆண்டுகளாக, 'வினாடி வினா விருது' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எட்டாவது ஆண்டாக நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இப்போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் நேற்று, 266 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இறுதி போட்டிக்கு 16 பேர் தேர்வாகினர். அவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, போட்டியை சந்தித்தனர். கேள்வியாளர், வினாவை தொடுத்த அடுத்த நொடிகளில், மாணவ மாணவியர் விடைகளை கூறி அசத்தி, போட்டியை அனல் பறக்க வைத்தனர்.
முடிவில், 'இயல்பான இயற்பியல்' அணி மாணவர்கள் முகுந்தன் - அல்டிரின் ஜோஸ்வா, முதல் பரிசு பெற்றனர். தர்ஷன் - நித்திஷ் மற்றும் டீரீத்திகா - பிரபாகரன், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
'பட்டம்' மாணவர் பதிப்பு இதழில் வரும் தலைப்புகள், எட்டு அணிகளுக்கும், அணி பெயர்களாக சூட்டப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் நாகராஜன், லிட்டில் ப்ளவர் பள்ளி தாளாளர் ஜான் சேவியர் தங்கராஜ், 'தினமலர்' இணை பொது மேலாளர் சேகர், 'பட்டம்' ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர், கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்தாண்டு, 200க்கும் அதிகமான பள்ளிகளில், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், ஒரு அணி தேர்வு செய்யப்படும்.
அந்த அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.
'பட்டம்' இதழ் மாணவர்களின் சிறந்த வழிகாட்டி
“ஆங்கில வழிக்கல்வி பள்ளியில், மாணவர்கள் தினசரி தமிழ் பயில காரணம் 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ்தான். எந்தவொரு வணிக நோக்கமும் இன்றி, மாணவர்கள், இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் சிறப்பிதழாக, 'பட்டம்' வெளி வருகிறது.
செய்தித்தாள் என்பது, செய்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் பொறுப்போடு, மாணவர்களுக்காக சிரத்தை எடுத்து, 'பட்டம்' இதழ் வெளியிடுவது பாராட்டுக்குரியது.
- ஜான் சேவியர் தங்கராஜ், தாளாளர், லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
