வடகிழக்கு பருவமழைக்கு எச்சரிக்கை! மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வடகிழக்கு பருவமழைக்கு எச்சரிக்கை! மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : அக் 15, 2026 05:01 PM
ADDED : அக் 15, 2026 05:02 PM
வால்பாறை:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து, தீயணைப்பு துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வால்பாறை தீயணைப்பு துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை தாசில்தார் அரசகுமார் துவக்கி வைத்தார். கல்லுாரி பேராசிரியர் பெரியசாமி வரவேற்றார். பருவமழையின் போது இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் (பொ) மாணவர்கள் மத்தியில் பேசினார்.
தொடர்ந்து, ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், திடீர் மயக்கத்தால் மாரடைப்பு ஏற்படும் போது அவர்களுக்கு முதலுவி செய்து காப்பாற்றுவது, மழை காலங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், சிவில்சப்ளை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
