'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி வினா: பாரதிய வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் வினாடி வினா: பாரதிய வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : நவ 07, 2026 01:37 AM
ADDED : நவ 07, 2026 01:37 PM
பொள்ளாச்சி:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான போட்டியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா நடந்தது. சத்யா ஏஜன்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசு பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.
இன்று நடந்த தகுதிச்சுற்றில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும், 50 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த இறுதி போட்டியில், 'சி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் மிதுன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சச்சின் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளி முதல்வர் பிரேமானந்தி வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பார்வதி, ஆசிரியர்கள் திலகரத்தினம், பிரீத்தி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். அதில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகள் பங்கேற்கும் இறுதி போட்டி ஒரே இடத்தில் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அறிவுக்களஞ்சியம்
பள்ளி முதல்வர் பிரேமானந்தி கூறியதாவது:
'பட்டம்' இதழ் ஒரு சிறந்த அறிவுக்களஞ்சியம். நம் நாட்டுச் செய்திகள் மட்டுமின்றி உலகளவில் செய்திகளையும் அறிந்து கொள்ள உதவும் ஒரு கலைப்பெட்டகம். 'பட்டம்' இதழை வாசிப்பதன் வாயிலாக, மாணவர்களின் வாசித்தல் திறன் மேம்படுகிறது.
அறிவியல், கணிதம், விளையாட்டு, பொது அறிவு என அனைத்து துறைகளிலும் உள்ள நுட்பமான செய்திகளையும், மாணவர்களுக்கு எடுத்துரைப்பதில் ஒரு மேதகு அறிஞராகவும் விளங்குகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவ்வாறு, கூறினார்.
