'பட்டம்' வாசிப்பில் மலர்ந்த அறிவு! வினாடி - வினாவில் வெற்றிக்கொடி நாட்டிய மாணவியர்
'பட்டம்' வாசிப்பில் மலர்ந்த அறிவு! வினாடி - வினாவில் வெற்றிக்கொடி நாட்டிய மாணவியர்
UPDATED : நவ 26, 2026 04:12 PM
ADDED : நவ 26, 2026 04:13 PM
திருப்பூர்:
தினமலர் 'பட்டம்' இதழ், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி - வினா போட்டி, அவிநாசி கணியாம்பூண்டி, தி எஸ்.சி.வி. சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது.
மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. இதனை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், இறுதிச்சுற்றில் சாதிக்கும் அணிக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அளவிலான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கணியாம்பூண்டி தி எஸ்.சி.வி. சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த போட்டியில் 60 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற 16 மாணவர்கள், எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், ஏழாம் வகுப்பு மாணவிகள் சிவாணி, அக்ஷரா முதலிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளித் தாளாளர் சான்றிதழ் வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.
'பட்டம்' இதழ் வாசிக்க பாடவேளை ஒதுக்கீடு
மாணவர்கள் 'பட்டம்' இதழை வாசிப்பதற்காக தமிழ் வகுப்பில் ஒரு பாடவேளை ஒதுக்கியுள்ளோம். தமிழ் ஆசிரியர்கள் தினமும் இதனை வாசிக்கச் செய்கின்றனர். இதனால் மாணவர்களின் பொது அறிவும், தமிழ் வாசிப்புத் திறனும் வளர்கின்றன. கற்றல் மற்றும் தேர்வு முடிவுகளிலும் இதன் பலன் தெரிகிறது. இந்த கல்வியாண்டில் 'பட்டம்' வாசிப்பில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. எல்லா மாணவர்களிடமும் இதன் பயன் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
- தீபா, முதன்மை நிர்வாக அலுவலர்.
புதிய தகவல்கள்
'பட்டம்' வாசிப்பதன் மூலம் அன்றாட உலக நடப்புகளை அறிய முடிகிறது. தமிழ், அறிவியல் சார்ந்த புதிய தகவல்களையும் தெரிந்து கொள்கிறோம். தமிழில் அதிகம் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலும், மொழி மீதான ஆர்வமும் அதிகரிக்கிறது.
- அக் ஷரா, மாணவி.
தமிழில் ஆர்வம்
அன்றாட நிகழ்வுகளுடன் புதிய தமிழ்ச் சொற்களையும் கற்றுக் கொள்கிறோம். இலக்கணம், வாசிப்பு, எழுத்துகளைச் சேர்த்துப் படிக்கும் பயிற்சிகளால் தமிழ் எளிமையாகிறது. வினாடி-வினாவில் பங்கேற்ற பிறகு, மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
- ஷிவானி, மாணவி.
