இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் 14ல் நடத்துகிறது தினமலர்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் 14ல் நடத்துகிறது தினமலர்
UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM
ADDED : ஜூன் 05, 2025 08:54 AM

சென்னை:
பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், வரும் 14ம் தேதி, சென்னை தி.நகர் மற்றும் குன்றத்துாரில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்க உள்ளது.
பி.இ., - பி.டெக்., படிக்க விரும்புவோருக்காக, தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து, சென்னை தி.நகர் வாணி மஹாலில், 14ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்படுகிறது.
இதே நிகழ்ச்சி, அன்று மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை, குன்றத்துார், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன வளாகத்திலும் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் நடக்க உள்ளது.
அதாவது, அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள இளநிலை பட்டப் படிப்புகளுக்கான இடங்களும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், கல்லுாரிகளின் கட் ஆப், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, இந்த நிகழ்ச்சியில் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள், புரோவிஷனல் அலாட்மென்ட் பெறுவது, கவுன்சிலிங் முறையில் இந்தாண்டு அறிமுகமாகி உள்ள புதிய மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்களும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான இந்த விளக்கம் மற்றும் ஆலோசனைகளை, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள், கல்வி ஆலோசகர்கள் நேரடியாக வழங்குகின்றனர். இதில், மாணவர்கள், தங்களின் பெற்றோருடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க, கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்தோ, 95667 77833 என்ற வாட்ஸாப் எண்ணில் ஆர்.ஜி.என்., என குறுஞ்செய்தி அனுப்பியோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.