இயற்பியலுக்கான திரக் பதக்கம் விஞ்ஞானி தீபக் தர்ருக்கு அறிவிப்பு
இயற்பியலுக்கான திரக் பதக்கம் விஞ்ஞானி தீபக் தர்ருக்கு அறிவிப்பு
UPDATED : ஆக 11, 2026 04:21 PM
ADDED : ஆக 11, 2026 04:22 PM
பெங்களூரு:
புள்ளியியல் இயற்பியல் மற்றும் சிக்கலான அமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தின் பேராசிரியர் தீபக் தர்ருக்கு, இயற்பியல் துறையின் உயரிய விருதான திரக் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இயங்கி வரும் சர்வதேச இயற்பியல் கோட்பாடு மையம், இயற்பியலாளர் பால் திரக்கின் நினைவாக ஆண்டுதோறும் இயற்பியல் கோட்பாடு மற்றும் கணிதத் துறையில் சிறப்பாக பங்காற்றி வருபவர்களுக்கு திரக் பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பதக்கம், பெங்களூருவில் உள்ள சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தின் பேராசிரியர் தீபக் தர்ருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் இயற்பியல் மற்றும் சிக்கலான அமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.
அவருடன், புள்ளியியல் இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டின் கவுரவ பேராசிரியர் பெர்னார்ட் டெரிடா, இத்தாலியின் இயற்பியல் பேராசிரியர் மார்க் மெசார்டு மற்றும் இஸ்ரேலின், ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலையின் பேராசிரியர் ஹைம் சோம்போலின்ஸ்கி ஆகிய மூவருக்கும் இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
