5 நாளில் 1,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை கல்வி அதிகாரிக்கு இயக்குநர் பாராட்டு
5 நாளில் 1,000 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை கல்வி அதிகாரிக்கு இயக்குநர் பாராட்டு
UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 11:18 AM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை சுறுசுறுப்பாகியுள்ளது. மார்ச், 1ல் மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், ஐந்து நாளில், 1,083 குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் இணைந்துள்ளனர்.
வரும், 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மார்ச், 1 முதல் துவங்க, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் அட்மிஷன் அதிகரிக்கும் நோக்குடன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தரப்பில் இருந்து விரிவான அறிவுறுத்தல், வழிகாட்டி நெறிமுறைகள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 1ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கியவுடன், ஒன்றாம் வகுப்பில் அதிக மாணவர் இணைய துவங்கினர்.
5ம் தேதி, திருப்பூர் கல்வி மாவட்டத்தில், எல்.கே.ஜி., - 112, யு.கே.ஜி., - 65, ஒன்றாம் வகுப்பு - 711, இரண்டு, மூன்று மற்றும், நான்காம் வகுப்பு முறையே, 83, 82 மற்றும், 104 பேரும், ஐந்தாம் வகுப்பில், 88, ஆறாம் வகுப்பில், 74, ஏழாம் வகுப்பில், 29 பேர் இணைந்தனர்.
நேற்று, 6ம் தேதி காலை நிலவரப்படி, முதல் வகுப்பில், 1,083 பேரும், மற்ற வகுப்புகளில், 711 பேரும் என மொத்தம், 1,794 பேர், ஐந்து நாட்களில் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.
மே மாதம் முடிந்து, ஜூனில் பள்ளி துவங்கும் முன்பாக மாணவர் சேர்க்கை முந்தைய கல்வியாண்டை விட அதிகரிக்கும் என, மாவட்ட தொடக்க கல்வித்துறை எதிர்பார்த்துள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் பழநி கூறுகையில், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேர்க்கைக்கென தனி ஆசிரியருக்கு பொறுப்பு வழங்கி, கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பள்ளி வேலை நாட்களில் முழு நாளும் நடத்தப்பட்டு வருகிறது. மிகக்குறுகிய நாட்களில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் இணைந்துள்ளதை பாராட்டி, பள்ளி கல்வித்துறை இயக்குநர் நரேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழநிக்கு பாராட்டு கடிதம் அனுப்பிஉள்ளார்.