நுால் உரிமை தொகை நிர்ணயத்தில் பாரபட்சமா? தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம்
நுால் உரிமை தொகை நிர்ணயத்தில் பாரபட்சமா? தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம்
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 09:38 AM

சென்னை :
நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நுால்களுக்கு, நுால் உரிமை தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தமிழறிஞர்கள் எழுதிய நுால்களின் எண்ணிக்கை மற்றும் சிறப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்தே, நுால் உரிமை தொகை வழங்கப்படுகிறது என, தமிழ் வளர்ச்சித்துறை விளக்கம் அளித்துள்ளது.
உரிமைத்தொகை
தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டால், நுால் உரிமை தொகையாக, 5 லட்சம் முதல், 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டது. இத்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது; வேண்டிய நபர்களுக்கு அதிகத் தொகையும், மற்றவர்களுக்கு குறைந்த தொகையும் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, எதன் அடிப்படையில், நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன; நுால் உரிமைத்தொகை எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என, வழக்கறிஞர் புஷ்பராஜ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கோரினார்.
அதற்கு, தமிழ் வளர்ச்சித்துறை தகவல் அலுவலர் ஜெயஜோதி அளித்துள்ள பதில்:
தமிழறிஞர்களின் நுால்களை நாட்டுடைமையாக்க விண்ணப்பங்கள் கோரி, தனியாக விளம்பரம் அல்லது அறிவிப்பு செய்யப்படுவதில்லை. விண்ணப்பங்கள் அனுப்ப காலவரையறை இல்லை; ஆண்டு முழுதும் பெறப்படுகின்றன.
நாட்டுடைமை
விண்ணப்ப படிவத்தை, www.tamilvalarchithurai.tn..gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழில் நுால்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழறிஞர்கள் அனைவரும், தங்கள் நுாலை நாட்டுடைமை செய்யக்கோரி விண்ணப்பிக்கலாம்.
அவரவர் எழுதிய நுால்களின் கருத்து கருவூலங்களை அடிப்படையாக வைத்து, நுால் உரிமை தொகை வழங்கப்படுகிறது. உயிருடன் இருப்பவர்களின் நுால்களுக்கு ஒரு தொகை, இறந்தவர்களின் நுால்களுக்கு ஒரு தொகை என, நிர்ணயம் செய்யப்படுவதில்லை.
நுால்கள் எண்ணிக்கை மற்றும் சிறப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து, வல்லுனர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, நுால் உரிமைத்தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2021 முதல் நடப்பாண்டு வரை, 22 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அதற்கான உரிமை தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மேல் முறையீடு
பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் நுால்களுக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சிலம்பொலி செல்லப்பன், நெல்லை கண்ணன் உட்பட எட்டு பேர் நுால்களுக்கு, 15 லட்சம் ரூபாய்; 11 பேருக்கு, 10 லட்சம் ரூபாய்; ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நுால் உரிமை தொகை குறைவு என கருதினால், தமிழ் வளர்ச்சி இயக்குனரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
இவ்வாறு பதில் கூறப்பட்டுள்ளது.