அரசுப் பணியாளர் தேர்வெழுதிய சிவில் இன்ஜினியர்கள் பரிதவிப்பு
அரசுப் பணியாளர் தேர்வெழுதிய சிவில் இன்ஜினியர்கள் பரிதவிப்பு
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 09:11 AM
மதுரை :
அரசுப் பணியாளர் தேர்வில் பங்கேற்ற முப்பதாயிரம் சிவில் இன்ஜினியர்கள் தேர்வு தொடர்பான வழக்கில் அரசு உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு 2023 ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. அதில் தேர்வு தகுதியாக பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி அல்லது பட்டய படிப்பில் தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.இ., சிவில் படித்த இன்ஜினியர்கள், பட்டயபடிப்பில் சிவில் படித்தவர்களும் முறையாக விண்ணப்பித்தனர். தேர்வு கடந்தாண்டு மே 7 ல் நடந்தது. ஆனால் பின்னாளில் இத்தேர்வு ஐ.டி.ஐ., முடித்த மாணவர்களுக்கு மட்டுமே உரியது என ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஐ.டி.ஐ., முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனத்தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தேர்வில் பங்கேற்ற பட்டய, பட்டம் பெற்ற சிவில் இன்ஜினியர்கள் மேல்முறையீடு செய்தனர். இதேபோல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், ஊரகவளர்ச்சித்துறையும் இத்தேர்வுக்கு ஐ.டி.ஐ., மட்டுமின்றி, டிப்ளமோ, பட்டம் முடித்த மாணவர்களுக்கும் உரியதே என்று மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கு 13.8.2024ல் விசாரணைக்கு வந்தபோதும் அனைத்து மேல்முறையீடு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் தேர்வு எழுதிய 30 ஆயிரம் பட்டயம், பட்டம் முடித்த சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள், அரசை நம்பி தேர்வு எழுதியும் பயனில்லையே என்ற தவிப்பில் உள்ளனர். தேர்வு நடத்திய பணியாளர் தேர்வாணையம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
30 ஆயிரம் பட்டயம் பட்டம் முடிந்த சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள், அரசை நம்பி தேர்வு எழுதியும் பயனில்லையே என்று தவிப்பில் உள்ளனர்.