வட்டார பேச்சை எழுத்து வடிவில் மாற்ற இலவச மென்பொருள் வெளியீடு
வட்டார பேச்சை எழுத்து வடிவில் மாற்ற இலவச மென்பொருள் வெளியீடு
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 09:13 AM
சென்னை:
தமிழின் வட்டார வழக்கு உள்ளிட்ட பேச்சொலியை, எழுத்தாக மாற்றும் வகையில், மென்பொருள் தயாரித்து, அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழ் இணைய கல்விக்கழகம் இலவசமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில், ஏழு மென்பொருட்களையும், தமிழை பிழையின்றி எழுதுவோம் என்ற நுாலையும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன், சென்னையில் வெளியிட்டார்.
ஒரு இனம் மற்றும் கலாசாரத்தின் பெருமையை மொழி தான் சுமக்கிறது. அந்த வகையில், தமிழ் தான், உலகின் தொன்மையான மொழியாகவும், தொடர்ச்சியான மொழியாகவும் உள்ளது. அதை, வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுவது அவசியம்.
அந்த பணியை, தமிழ் இணைய கல்விக்கழகம் செய்கிறது. முக்கியமாக, கல்வி, மின்னுாலாக்கம், கணினித்தமிழ் என்ற மூன்று பணிகளை செய்கிறது.
மின் நுாலாக்கம் செய்யும் பணியில் இதுவரை, ஒரு லட்சம் நுால்கள் மற்றும் பருவ இதழ்களும், 8.2 லட்சம் கலை வடிவங்களும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டுள்ளன. இவற்றை பார்த்தவர்களின் எண்ணிக்கை விரைவில், 1 கோடியை எட்ட உள்ளது.
கணினித்தமிழ் என்ற பிரிவில், ஏற்கனவே பல்வேறு, பான்ட் என்ற எழுத்துருக்களை, யுனிகோட் ஆக மாற்றும் மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, ஏழு மென்பொருட்களை வெளியிட்டுள்ளேன்.
இவற்றை, https://www.tamilvu.org/ என்ற இணையதளத்தில் இருந்து, இலவசமாக தரவிறக்கி அனைவரும் பயன்படுத்தலாம். இவ்வாறு தியாகராஜன் பேசினார்.
நிகழ்வில், துறை இயக்குனர் காந்தி, இணை இயக்குனர் கோமகன், உதவி இயக்குனர்கள் மதுரா, செல்வபுவியரசன், ஜேம்ஸ் உள்ளிட்டோருடன், ஏ.எம்.ஜெயின் கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர்.