UPDATED : அக் 09, 2025 07:18 PM
ADDED : அக் 09, 2025 07:19 PM
கலிபோர்னியா:
அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு நற்செய்தியாக, கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு, ஹிந்துக்கள் பண்டிகையான தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
கடந்த மாதம் கலிபோர்னியாவின் சட்டசபையின் இரு சபைகளிலும், தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவுக்கு, கவர்னர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
இதன்படி, தீபாவளியை ஒட்டி, அரசு பொது கல்லுாரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும். இதற்கு முன், 2024ல் பென்சில்வேனியா, 2025ல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை விடுமுறையாக அறிவித்து உள்ளன.