புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கிய மூவருக்கு அறிவிப்பு; வேதியியலுக்கான நோபல் பரிசு
புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கிய மூவருக்கு அறிவிப்பு; வேதியியலுக்கான நோபல் பரிசு
UPDATED : அக் 09, 2025 07:19 PM
ADDED : அக் 09, 2025 07:20 PM
ஸ்டாக்ஹோம்:
'மெட்டல் - ஆர்கானிக் பிரேம்வொர்க்ஸ்' என்ற புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியதற்காக, 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், பட்டயம், பணப் பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது, ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ல் வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான விருது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் பெயர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் விபரம் அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் ராப்சன், 88, ஜப்பானின் சுசுமு கிட்டகாவா, 74, அமெரிக்காவின் ஓமர் யாகி, 60, ஆகியோர் இந்தாண்டு வேதியியலுக்காக நோபல் பரிசு பெற உள்ளனர். இவர்களின் ஆய்வு, 'மெட்டல் - ஆர்கானிக் பிரேம்வொர்க்ஸ்' என்ற புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பு உருவாக வழிவகுத்தது.
இந்த மூலக்கூறு கட்டமைப்புக்குள் வெற்றிடம் அதிக அளவு இருக்கும். அவற்றை நச்சு வாயுக்களை உறிஞ்ச செய்யவோ, காற்றிலிருந்து நீரை உறிஞ்சவோ பயன்படுத்த முடியும். இது, தொழில் துறையில் பெரிய அளவில் பயன் தரும் என கூறப்படுகிறது.