படித்த இளைஞர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
படித்த இளைஞர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 09:52 AM
சென்னை :
அரசு காலி பணியிடங்களை நிரப்பாமல், படித்த இளைஞர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், ஒட்டுமொத்தமாகவே 70,000 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில், 40,000 பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள். ஆண்டுக்கு, 50,000 பேர் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
ஆனால், ஐந்து ஆண்டுகளில் வெறும், 40,000 பேருக்கு மட்டுமே நிரந்தர அரசு வேலைகளை தி.மு.க., அரசு வழங்கியுள்ளது.
இது, படித்த இளைஞர்களுக்கு, தி.மு.க., அரசு செய்த துரோகம். தமிழகத்தில் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்து உள்ளன.
இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதை இந்த புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. தி.மு.க., அரசு வேலை வழங்கும் என்ற நம்பிக்கை, படித்த இளைஞர்களிடம் குலைந்து விட்டது.
ஓட்டளித்த இளைஞர்களுக்கு துரோகம் செய்த முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்புமணி வெளியிட்ட இன்னொரு அறிக்கை:
சென்னையில் நடந்த பல்கலை பதிவாளர்கள் கூட்டத்தில், பல்கலை பேராசிரியர்களாக ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், தொழில் துறையினர், வெளிநாட்டு ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க, உயர் கல்வித்துறை செயலர் சமயமூர்த்தி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் தவறான, பிற்போக்கான முடிவு.
இதனால், பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களின் வாய்ப்புகள் பறிபோகும்; இட ஒதுக்கீடும் இருக்காது. ஒருபுறம் சமூக நீதி பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சமூக நீதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதன் வாயிலாக, தி.மு.க., அரசின் முகத்திரை கிழிந்து விட்டது.
மத்திய அரசே எதிர்ப்புக்கு அஞ்சி கைவிட்ட சமூக நீதிக்கு எதிரான முடிவை, சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் அரசு திணிக்கிறது என்றால், அதன் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடியும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தான், அனைத்து துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் வழக்கம் தீவிரமடைந்துள்ளது. இப்போது, பல்கலைகளின் ஆசிரியர்கள் நியமனத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.