ஹிந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்
ஹிந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க., மாணவரணி ஆர்ப்பாட்டம்
UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 09:12 AM

சென்னை:
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, தி.மு.க., மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும், கட்சியினர் பேரணியாக சென்று, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., மாணவர் அணி அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சைதாப்பேட்டையில், கருணாநிதி பவளவிழா வளைவில் இருந்து, தி.மு.க., மாணவர் அணியினர் பேரணியாக புறப்பட்டு, பஜார் சாலை வழியாக, தபால் நிலையம் சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் சென்னை மாவட்ட, தி.மு.க., மாணவர் அணித் தலைவர் அருண் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மத்திய அரசு ஹிந்தியை திணிக்கிறது. அதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, மத்திய அரசு உடனே தர வேண்டும். தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கை அவசியம் என்றார்.
வட சென்னையில், தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர் அணியினர் திரளாக பங்கேற்றனர். தமிழகம் முழுதும், மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், யு.ஜி.சி., வரைவு கொள்கையை திரும்பப் பெற வேண்டும். மும்மொழி கொள்கையை திணிக்கும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டன.