கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் பிற துறைகளை துவங்க வேண்டாம்!
கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் பிற துறைகளை துவங்க வேண்டாம்!
UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 10:50 AM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் பிற துறைகளின் எந்த பணியையும் தொடர வேண்டாம் என கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை இயக்குனர் அமிர்தஜோதி, கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கள்ளக்குறிச்சி கால்நடை மருத்துவமனை கடந்த 1927ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரமாக மாறியுள்ள நிலையில், இந்த மருத்துவமனை, கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இதனால் மருத்துவமனையில் உள்ள இடங்கள் அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறையின் பயன்பாட்டிற்கே தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் வகையில் நிலவகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கால்நடை துறையின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, நில மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த வளாகம் கால்நடை துறைக்கான பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால், இங்கு வேறு துறை அலுவலக பயன்பாட்டிற்கு மாற்ற முடியாது என விழுப்புரம் கால்நடை பராமரித்துறை மண்டல இயக்குனர் அறிவித்துள்ளார்.
எனவே கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் வேறு துறை அலுவலகங்களுக்கான பணிகள் எதனையும் தொடர வேண்டாம்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

