UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 10:08 AM
திருப்பூர்:
மாநில வேளாண் அமைச்சகம் சார்பில், கடந்தாண்டு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளை ஒன்றாக இணைக்க திட்டமிடப்பட்டது.
வேளாண் துறையினர் கூறியதாவது:
இத்திட்டம் அமல்படுத்தப்படும் போது, உதவி வேளாண் அலுவலர்கள், 'உதவி வேளாண் விரிவாக்க அலுவலர்' எனவும், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை விரிவாக்க அலுவலர் என்ற பெயரில் பதவி வழங்கப்படும்; ஒவ்வொரு உதவி வேளாண் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலருக்கும், 3 முதல், 4 ஊராட்சிகளை உள்ளடக்கி, 1,200 எக்டர் விவசாய பரப்பு ஒதுக்கப்படும்.
அங்குள்ள விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி என அந்தந்த பயிர் வளர்ச்சிக்குரிய முழுப்பொறுப்பை அந்த அலுவலர் தான் ஏற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. ஆனால், இத்திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டத்தால், மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் நிலையிலான பதவிகள் பெருமளவில் குறையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதிகாரிகள் நிலையிலான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்பட்டு கொண்டே இருக்கிறது. இத்திட்டம் செயல்பாடுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.