UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 08:34 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் நிறுவனத்தின் புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் பொறுப்பேற்றுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறப்புப் பெற்றவர். நரம்பியல் நோயியல் மற்றும் மூலக்கூறு புற்றுநோயியல் துறையில் முன்னோடி பங்களிப்பை செய்துள்ளார்.
டாக்டர் சித்ரா சர்க்கார் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர். இந்திய அறிவியல் அகாடமியால் வெளியிடப்பட்ட 100 புகழ்பெற்ற “இந்திய அறிவியல் பெண்கள்” பட்டியலில் இடம் பெற்றவர் மற்றும் நரம்பியல் இந்தியா 2019-ல் முன்னோடி “இந்திய நரம்பியல் அறிவியல் பெண்கள்” பட்டியலில் ஒருவர். 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் “எசென்ஷியல்ஸ் ஆஃப் டையாக்னஸ்டிக் சர்ஜிக்கல் நியூரோபாதாலஜி” நூலின் ஆசிரியராகவும் உள்ளார்.
சர்வதேச அமைப்புகளிலும் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ள டாக்டர் சித்ரா சர்க்கார், மூளை மற்றும் தண்டுவடக் கட்டி வகைப்பாடு, குழந்தைகள் மற்றும் நியூரோ-எண்டோகிரைன் கட்டிகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர்.
புதிய தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி அவரை வரவேற்று, நிறுவனத்தின் வரலாறு, தற்போதைய செயல்முறை அமைப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி விளக்கியுள்ளார்.
டாக்டர் சித்ரா சர்க்காரின் நியமனம், ஜிப்மரை நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதார சேவை மையமாக வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக இருக்கிறது என இயக்குநர் தெரிவித்தார்.