UPDATED : நவ 05, 2026 05:14 PM
ADDED : நவ 05, 2026 05:15 PM

புதுடில்லி:
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தகுதி விதிகளில் மிகப்பெரிய திருத்தங்களை மேற்கொள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்ட மாணவர்களைத் தகுதித் தேர்வுகள் எழுத அனுமதிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை மாற்றியமைக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விப் படிப்பின் முதல் பேட்ச் மாணவர்கள், வரும் 2027 - 28 கல்வியாண்டில் தங்கள் படிப்பை நிறைவு செய்ய உள்ளனர். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள சி.டி.இ.டி., மற்றும் எஸ்.டி.இ.டி., வழிகாட்டுதல்களில் இந்த 4 ஆண்டு பட்டதாரிகளுக்கான தகுதி விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வர, பிரத்யேக குழு அமைக்கப்பட்டது.
இக்குழு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான, 2014ஆம் ஆண்டின் குறைந்தபட்சத் தகுதி விதிகளில், திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் நேரடி பணி நியமனங்களிலும் ஐ.டி.இ.பி., படிப்பை ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகுதியாக இணைப்பதற்கான வரைவை உருவாக்கவுள்ளது.
'ஐ.டி.இ.பி.,' படிப்பு பற்றி
வழக்கமாகப் பட்டப்படிப்பு முடித்த பின் 2 ஆண்டுகள் பி.எட்., படிப்பதற்குப் பதிலாக, 12ஆம் வகுப்பு முடித்த உடனேயே நேரடியாக ஆசிரியர்ப் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதே 4 ஆண்டு ஐ.டி.இ.பி., படிப்பு.
புதிய கல்விக் கொள்கையின் படி, ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பாடக் கல்வியும், தொழில்முறை ஆசிரியர் பயிற்சியும், இதில் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 409 உயர்கல்வி நிறுவனங்களில், இப்படிப்பு நடைமுறையில் உள்ளது.
