UPDATED : செப் 28, 2026 02:02 PM
ADDED : செப் 28, 2026 02:03 PM
அன்னுார்:
போதையில்லா உலகம் படைக்க, மாணவர்களுக்கு என்.எஸ்.எஸ்., முகாமில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒரு வார சிறப்பு முகாம் துவங்கியது. போதைப் பழக்கம் மற்றும் காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குதல் என்னும் தலைப்பில் இந்த முகாம் நடைபெறுகிறது. பிளஸ் 1 மாணவர்கள் 25 பேர் இதில் பங்கேற்கின்றனர்.
நாகமாபுதுார் துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை கீதா பேசுகையில், “போதை பழக்கத்தால் உடல் நலம், பொருளாதாரம், மன நலம் பாதிக்கப்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒரு முறை தான் என்று நினைத்து போதைப் பழக்கத்தை துவக்க கூடாது. அது மீள முடியாதபடி செய்து விடும்,” என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் மரக்கன்றுகளை நட்டார். மருத்துவ முகாம் நடந்தது. கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்கள், அன்னுார் ரோட்டரி சங்க பொருளாளர் ராஜேந்திரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மன்னீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி செய்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துதல், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிடுதல், பள்ளி வளாகத்தை துாய்மை செய்தல் ஆகிய பணிகள் முகாமில் நடைபெற உள்ளன.
