புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்குவதற்கான... சட்டம் அமலானது! தாமதிக்கும் அதிகாரிகளுக்கு தினசரி ரூ. 250 அபராதம்
புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்குவதற்கான... சட்டம் அமலானது! தாமதிக்கும் அதிகாரிகளுக்கு தினசரி ரூ. 250 அபராதம்
UPDATED : பிப் 23, 2026 12:04 PM
ADDED : பிப் 23, 2026 12:09 PM

புதுச்சேரி மாநிலத்தில் 77 பெரிய தொழிற்சாலைகள், 191 நடுத்தர தொழிற்சாலைகள், 7,872 சிறு தொழிற்சாலைகள், 1,157 குறு தொழிற்சாலைகள் என,மொத்தம் 9,307 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 15,873 கோடி அளவிற்கு ஆண்டிற்கு உற்பத்தி நடக்கிறது. மாநிலத்தில் மேலும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி மாநிலத்தில் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு சட்ட வரைவினை தயார் செய்தது. இந்த சட்ட வரைவு கேபினெட்டில் வைத்து, கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு கேள்விகளை மத்திய அரசு எழுப்பிய நிலையில் உடனடியாக ஒப்புதல் கிடைக்கவில்லை.
பின், ஒரு வழியாக மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதனை சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஜனாதிபதியும் தற்போது ஒப்புதல் கொடுத்ததையடுத்து புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்குவதற்காக சட்டம் - 2026 அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, புதுச்சேரியில் தொழில் துவங்க விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
30 நாட்களுக்குள் புதிய சட்ட வரைவின்படி அதிக அளவில் வெளிநாடு, வெளிமாநில முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துறை ரீதியான உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதற்காக வழிமுறைகளை புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத் துறை சுலபமாக்கியுள்ளது.
ஒற்றை சாளர முறையில் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்கப்பட உள்ளது. ஆவணங்கள் சரியாக இருந்தால் புதுச்சேரியில் தொழில் துவங்க அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அனுமதி பெற்றுவிட முடியும். இதற்கான காலக்கெடு புதிய வரைவு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துறைகள் அனுமதி
தொழில் துவங்க நினைக்கும் முதலீட்டாளர்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மாவட்டத் தொழில் மையத்தில் செயல்படும் இந்த தொழில்முறை வழிகாட்டி குழுமத்தினை நேரில் அணுகி விண்ணப்பித்தால் போதும். தொழில் அனுமதிக்கான விண்ணப்பம் தடையில்லா சான்றிதழ் பெறுவது எளிதாகிவிடும். அங்கிருந்து பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றிதழ் பெற அதிகபட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பப்பட்டு விடும்.
தொழில் வழிகாட்டு குழுமத்தில் இருந்து பொதுவாக தொழிற்சாலைகள் விதியின் கீழ் அனுமதி பெற தொழிற்சாலை மற்றும் கொதிகலன் தலைமை ஆய்வகத்திற்கும், சுற்றுச்சூழல் மாசு அனுமதி பெற அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும், மனை அனுமதி பெற நகர மற்றும் கிராம அமைப்பு துறைக்கும், கட்டட வரைப்பட ஒப்புதல் பெற புதுச்சேரி பி.பி.ஏ., திட்ட குழுமத்திற்கும், நிலப்பயன்பாடு மாற்றதிற்கான அனுமதி பெற, நகர மற்றும் கிராமப்பு அமைப்பு துறையின் நிலப்பயன்பாடு மாற்று குழுவிற்கும், நிலம் கையகப்படுத்தலில் இருந்து விலக்கு பெற வருவாய் துறைக்கும், பொது ஆட்சேபனை அனுமதி பெற நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திற்கும் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் பிரித்து அனுப்பப்பட்டு விரைவாக அனுமதி தரப்படும்.
அபராதம் உண்டு
தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கும் போது காரணம் இன்றி அனுமதி தராமல் இழுத்தடிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என, இச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இழுத்தடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி 15 அலுவலக நாட்களுக்குள் விளக்கம் கேட்டு, அதன் பிறகு இந்த அபராத முடிவு எடுக்கப்படும்.
இதற்காக தலைமை செயலர் தலைமையில் மேல் முறையீட்டு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகையின் போது கரசூர் தொழிற்பேட்டையில் புதிதாக தொழிற்சாலைகளை அனுமதி தர புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்குவதற்கான சட்டம் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
92 அரசு சேவைகள்
புதுச்சேரி அரசு துறையில் மொத்தம் 54 அரசு துறைகள் உள்ளன. இதில் 26 அரசு துறைகளில் எளிதாக தொழில் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 92 சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையின் தொழில் அனுமதிக்கும் தனியாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் விளக்கம் தேவையென்றால் 7 நாட்களுக்கு கேட்டு நிவர்த்தி வேண்டும்.
புதுப்பிப்பு விண்ணப்பம் எனில், போர்டில் வைத்து 7 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும். தவறாக தகவல்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால் மூன்று நாட்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட வேண்டும்.
வனத்துறையை பொருத்த வரை இது வனம் இல்லாத இடம் என்றும், இது வனத்தில் இருந்து இவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என, சான்றிதழை 15 நாட்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். தீயணைப்பு தடையில்லா சான்றிதழ், பில்டிங் அப்ரூரவல், தண்ணீர், உயர் மின்னழுத்த இணைப்பு 30 நாட்களுக்குள் தர வேண்டும். குறைந்த மின்னழுத்த மின் இணைப்பினை 21 நாட்களுக்குள் தர வேண்டும்.

