இன்றைக்கு படித்தவர்கள் தான் அதிகம் குற்றம் செய்கின்றனர்: உயர்நீதி மன்ற நீதிபதி பேச்சு
இன்றைக்கு படித்தவர்கள் தான் அதிகம் குற்றம் செய்கின்றனர்: உயர்நீதி மன்ற நீதிபதி பேச்சு
UPDATED : செப் 21, 2026 04:46 PM
ADDED : செப் 21, 2026 04:55 PM
கோவை:
கோவிந்தராஜூலு வனஜாட்சி நினைவு அறக்கட்டளை சார்பில், தலைமை ஆசிரியர் எஸ்.ஜெகன்னாதன் நினைவு விருது வழங்கும் விழா, ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்தது. கவிஞர் ரவிசுப்ரமணியன் தலைமை வகித்தார்.
ஜெகன்னாதன் நினைவு விருதை, வெள்ளியங்காடு அரசு பள்ளி ஆசிரியர் அருள்சிவாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
இந்த உலகத்தில், உழவுத்தொழிலும், ஆசிரியர் தொழிலும் தான் உயர்ந்த தொழிலாக போற்றப்படுகிறது. இந்த தொழிலை செய்பவர்கள் தான் வயிற்று பசியையும், அறிவு பசியையும் தீர்க்கின்றனர்.
இன்றைக்கு கல்வி கற்பதே பெரிய போராட்டமாக உள்ளது. மதிப்பெண், தரவரிசை, போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வு என, மாணவர் மீது சுமைக்கு மேல் சுமை ஏற்றப்படுகிறது. இப்படித் தான் படிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
நான் ஒரு நீதிபதி என்ற முறையில் சொல்கிறேன், இன்றைக்கு நாட்டில் படித்தவர்கள்தான் அதிகம் குற்றம் செய்கின்றனர். சைபர் கிரைம் குற்றவாளிகள் எல்லோரும் நன்றாக படித்தவர்கள்.
கற்ற கல்விக்கு ஏற்றபடி வாழ்வதில்லை. கல்வி என்பது பிழைப்புக்கான தொழில்நுட்பமாக மாறிவிட்டது. வகுப்பில் பாடம் நடத்த ஏஐ தொழில்நுட்பம் வந்து விட்டது. அது ஆசிரியரை விட சிறப்பாக பாடம் நடத்தும்.
ஆனால் அதற்கு ஆசிரியருக்கு இருக்கும் ஆன்மா அதற்கு இல்லை. ஏஐ தொழில்நுட்பத்தால் மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. இது போன்ற கல்வி ஆரோக்கியமான கல்வி முறையல்ல, இதனால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இவ்வாறு, அவர் பேசினார்.
விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம், எழுத்தாளர் நளந்தா ஜெம்புலிங்கம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
