UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 01:29 PM
பெங்களூரு:
கல்வி கட்டண விபரத்தை வெளியிடும்படி, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு கல்வி கட்டணம் உயர்த்தி கொண்டே உள்ளனர். அதுவும் இந்தாண்டு, சில பள்ளிகள் 30 - 40 சதவீதம் வரை கல்வி கட்டணம் உயர்த்தி இருப்பதாக ஏராளமான பெற்றோர், கல்வி துறைக்கு புகார் அளித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், எச்சரிக்கை அடைந்த பள்ளி கல்வி துறை கமிஷனர் காவேரி, புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
அதன்படி, ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும்; எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதையும் பெற்றோர், பொது மக்களுக்கு தெரியும் வகையில், பள்ளியின் தகவல் பலகை, இணையதளம், கல்வி துறை இணையதளத்தில் வெளியிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விபரம் வெளியிடாத பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியல் எங்கே?
ஆண்டுதோறும், அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிகள் பட்டியலை வெளியிடும் கல்வி துறை, இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் பட்டியலை மட்டுமே பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் பட்டியல் வெளியிடாததால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.