UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 08:45 AM
கோபி:
கற்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என திருப்பூர் எம்.பி., சுப்பராயன் பேசினார்.
கோபி அருகே முருகன்புதுாரில் இயங்கும், நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் கழிப்பறை கட்டமைப்புக்கான பூமி பூஜையை, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும். கல்வி மிகுந்த முக்கியத்துவமானது. ஒரு மனிதனை, மனிதனாக செதுக்குவது கல்வி தான்.
கற்றவர்கள் எல்லாம் நல்ல பண்போடு நடந்து கொள்வதில்லை. கல்வியில் பின்தங்கியவர்களை, மக்கு என அழைப்பது என்பது ஒரு தவறான போக்காகும்.
எந்த குழந்தையும் பிறக்கும்போதே, மக்காக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளிடமும் ஒரு ஆற்றல் உள்ளது என்பதை, ஊடுருவி கண்டறிய உதவுவது தான் அந்த கல்வி. அதை கண்டறிவது தான் ஆசிரியரின் முக்கிய பணி. அந்த ஆற்றலை கண்டறிந்து, அந்த குழந்தையை விஸ்வரூபம் எடுக்க வைப்பது தான் கல்வி.
கல்வி என்பது விலைகொடுத்து வாங்குவதாக இருக்க கூடாது. கற்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசு இலவசமாக கல்வியை தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.
இவ்வாறு பேசினார்.