நிர்வாக குளறுபடியால் சாதனை பள்ளி, சோதனை பள்ளியானது
நிர்வாக குளறுபடியால் சாதனை பள்ளி, சோதனை பள்ளியானது
UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 08:45 AM
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே சாதனைகள் புரிந்த அரசுப் பள்ளி நிலவும் நிர்வாக குளறுபடிகளால் களையிழந்து வருகிறது.
இவ்வொன்றியத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி சில ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை புரிந்து வந்தது. குறிப்பாக இங்கு படித்த 7 பேர் நீட் தேர்வு எழுதி மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
விவசாய பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதும் பள்ளி பெற்றது. இந்நிலையில் சில மாதங்களாக இப்பள்ளியில் நிலவும் நிர்வாக குளறுபடிகளால் பள்ளி களையிழந்து காணப்படுகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு, பாதுகாப்பு விசயங்களில் குறைபாடுகள் அதிகம் உள்ளது.
வகுப்பறைகளில் மின்சார ஸ்விட்ச் போர்டுகள் உடைந்து ஆபத்தான நிலையில், கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. மாணவிகள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. பெற்றோர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இப்பள்ளியில் செயல்பட்டு வந்த கலைப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது.
இதனால் அப்பிரிவு படிக்க விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக அறிவியல், கணக்கு பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பல மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாதனை பள்ளியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.