ஓய்வுக்கு பின் தொடரும் ஆசிரியர் பணி சேவையை பாராட்டும் மக்கள்
ஓய்வுக்கு பின் தொடரும் ஆசிரியர் பணி சேவையை பாராட்டும் மக்கள்
UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 08:46 AM
திருப்புத்தூர்:
திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓய்வுக்கு பின்னரும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் தலைமை ஆசிரியையை பாராட்டுகின்றனர்.
திருப்புத்தூர் புதுப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சித்தி ஜவாஹிரா. இவர் 1989 ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். 35 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த 2000 லிருந்து இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி 2024 மே 31ல் ஓய்வு பெற்றார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் சுமார் 32 ஆண்டுகள் புதுப்பட்டி பள்ளியில் பணியாற்றியவர். இதனால் தற்போதைய மாணவர்களின் பெற்றோர்கள் கூட இவரிடம் படித்துள்ளனர்.
இதனால் ஓய்வு பெற்ற பின்பும் வீட்டில் இருக்காமல் பள்ளிக்கு வந்து வகுப்பு எடுக்க உதவுவதுடன், நிர்வாகப் பணிகளுக்கும் உதவுகிறார். இப்பள்ளியில் மொத்தம் 206 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியிலுள்ள 7 ஆசிரியர்களுடன் இவரது வருகையால் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கிறது. ஆசிரியை சித்தி ஜவாஹிராவை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த டி.இ.ஓ., செந்தில் குமரன், பி.இ.ஓ., சாந்தி பாராட்டினர்.