பாரதிதாசன் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாரதிதாசன் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:19 AM
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சியில், பசுமை தேர்தல் சின்னம் வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் துறை சார்பில், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓட்டு அளிப்பதின் அவசியம், வாக்காளர்களின் உரிமை குறித்து இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், தேர்தல் விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசுகையில், 'சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தேர்தல் நடத்தப்படுவது அவசியம். தேர்தல் பிரசாரம், தேர்தல் பணிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்ட பசுமை தேர்தல் சின்னம் வெளியிடப்பட்டது. கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக அறை திறந்து வைக்கப்பட்டது.
தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி காய்கறிகளை கொண்டு மாணவிகள் உருவாக்கிய கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் துறை நடத்திய போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி வளாகத்திற்குள் மரக்கன்று நடப்பட்டது. தேர்தல் குறித்த தவறான தகவல்கள் பரிமாற்றங்களிலிருந்து விழிப்புடன் இருத்தல் குறித்த விளக்க வீடியோ திரையிடப்பட்டது.
மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். தலைமை துணை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கந்தசாமி, சுவீப் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.