UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:18 AM

சாயல்குடி:
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்.பி.,யின் தேர்தல் பிரசாரத்தில், விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.
மாணவர்களை காலை 7:00 மணிக்கு வரச்சொல்கின்றனர். மதியம் பிரியாணி கொடுத்து, இரவு 10:30 மணி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். வேட்பாளர் வருவதற்கு முன் கையில் சின்னத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஓட்டு கேட்டு செல்கின்றனர். சாயல்குடி, கமுதி, பெருநாழி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் அணிந்த டி ஷர்ட்களை அணிந்து பிரசாரம் செய்கின்றனர்.
சில வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் நிலையிலும் 7 முதல் பிளஸ்1 வகுப்பு மாணவர்களை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.மாணவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது என்ற தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, நவாஸ்கனிக்காக அவர்களை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.