UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 08:54 AM
பந்தலுார் :
பந்தலுார் அருகே கரியசோலை அரசு பள்ளி அருகே, யானைகள் முகாமிட்டதால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
பந்தலுார் அருகே கரியசோலை அரசு பள்ளி அருகே புதர் உள்ளது. அங்கு நேற்று காலை, 3 யானைகள் முகாமிட்டன. பள்ளியை ஒட்டி யானைகள் முகாமிட்டதால், மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானைகளை பள்ளியை ஒட்டிய சாலையின் கீழ் பகுதியில் உள்ள வனத்திற்குள் விரட்டினர்.
இதனால், மாணவர்கள் அச்சமின்றி வகுப்புகளுக்கு சென்றனர். இதே போல் ராக்வுட் சாலையோர மலைப்பகுதியில், இரண்டு யானைகள் முகாமிட்டன. மலையின் உச்சியில், யானைகள் முகாமிட்டிருந்த காட்சியை, இந்த வழியாக வந்து சென்ற மக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
யானைகள் மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வராமல் இருக்கும் வகையில், வனக்குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.