UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 09:31 AM
புதுடில்லி:
அமெரிக்காவில் கார் மோதி, கோமா நிலையில் இருக்கும் மஹாராஷ்டிரா மாணவியின் தந்தைக்கு, நம் வெளியுறவு துறை முயற்சியால் எமர்ஜென்சி விசா கிடைத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த நீலம் ஷிண்டே, 35, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில் எம்.எஸ்., படிப்பு படிக்கிறார்.
தற்போது இறுதி ஆண்டு படிக்கும் அவர் மீது, சமீபத்தில் கார் மோதியதில், தலை, மார்பு, கை, கால்களில் பலத்த அடிபட்டு, 'கோமா' நிலையில் கலிபோர்னியா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் விபத்தில் சிக்கிய தகவல், இரண்டு நாட்களுக்கு பின், மஹாராஷ்டிராவில் இருக்கும் தந்தை தனாஜி ஷிண்டேவுக்கு கிடைத்தது. மாணவிக்கு மூளையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால், குடும்பத்தினர் இருப்பது அவசியம்.
எனவே, மாணவியின் தந்தை தனாஜி, விசா கேட்டு விண்ணப்பித்தபோது, அவருக்கு அடுத்த ஆண்டு தான் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. அமெரிக்கா சட்டப்படி, ஒருவர் கடுமையாக நோய்வாய்பட்டாலோ, இறந்து போனாலோ, எமர்ஜென்சி விசா விரைவாக கிடைக்கும்.
ஆனால், 10 நாட்களாகியும் தனாஜியின் கோரிக்கை நிலுவையில் வைக்கப்பட்டது குறித்து, நம் வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு, எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள நம் துாதரகத்தின் வாயிலாக அமெரிக்க அதிகாரிகளிடம் தனாஜிக்கு விசா வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, அங்குள்ள வெளியுறவு துறை அதிகாரிகளிடம் வலியுறுத்திய நிலையில், தனாஜியின் எமர்ஜென்சி விசா விண்ணப்பம் விரைவாக பரிசீலிக்கப் பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தனாஜிக்கு எமர்ஜென்சி விசா கிடைத்துள்ளது. இன்று காலை 9:00 மணிக்கு, மும்பையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் நேர்காணலுக்கு வரும்படி தனாஜி அழைக்கப்பட்டுள்ளார்.