மகா சிவராத்திரியன்று அசைவ உணவா? பல்கலையில் மாணவர்களிடையே மோதல்
மகா சிவராத்திரியன்று அசைவ உணவா? பல்கலையில் மாணவர்களிடையே மோதல்
UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 09:29 AM
புதுடில்லி:
மகா சிவராத்திரியின் போது அசைவ உணவு வழங்கியதாக, டில்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலையில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள ஹிந்து சமூக மக்களால் சிவராத்திரி நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று இரவு முதலே கோவில்களில் திரண்ட மக்கள், சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
இந்த நிலையில், மகா சிவராத்திரி தினமான நேற்று தெற்கு ஆசிய பல்கலையில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாகக் கூறி, எஸ்.எப்.ஐ., மற்றும் ஏ.பி.வி.பி., மாணவர்கள் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு ஆசிய பல்கலையின் உணவகத்தில் மாணவி ஒருவரை தாக்குவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. உணவு பரிமாறுவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசாருக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக உண்மை நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்ததாகவும், இதனை ஏற்காத மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எஸ்.எப்.ஐ., அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல, விரதம் இருக்கும் மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அசைவ உணவை கொடுத்ததால் தான் பிரச்னை ஏற்பட்டதாக ஏ.பி.வி.பி., அமைப்பினர் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் தரப்பில் எந்தவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்கலை நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.