UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:30 AM
மதுரை :
மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர பொதுக்குழுக் கூட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் முனியாண்டி, பொருளாளர் முருகன் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ரங்கராஜன், ராஜகோபால், செந்தில்குமார், ஜெயபால், குமார், சரவணகுமார், ஷர்புதீன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மதுரை மாநகராட்சியில் இயங்கும் மைய நிர்வாக பிரிவில் காலியாக இருந்த ஓட்டுனர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவுமூப்பு பட்டியலின் இனச்சுழற்சி அடிப்படையில் 2013 முதல் தற்காலிக ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றனர். கலெக்டர் நிர்ணயம் செய்யும் சம்பள அடிப்படையில் பணிபுரிகின்றனர். அந்த ஓட்டுனர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்த ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் விதிகளுக்கு புறம்பாக உள்ளது. அவரது பணிமாறுதலை ரத்து செய்து மீண்டும் அதே பள்ளிக்கு நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக கமிஷனரை சந்திப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.