குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையை வெளியில் விற்று காசு பார்க்கும் ஊழியர்கள்
குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையை வெளியில் விற்று காசு பார்க்கும் ஊழியர்கள்
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:27 PM
சென்னை:
குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக, அங்கன்வாடி மையங்களுக்கு தமிழக அரசு வழங்கும் முட்டை, சத்துமாவு, செறிவூட்டப்பட்ட, பிஸ்கட் போன்றவற்றை, ஊழியர்கள் முறை யாக வழங்காமல், வெளியில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில், துணை சத்துணவு திட்டத்தின் கீழ், ஆறு மாதம் முதல் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தினமும், 125 கிராம் வீதம், மாதம் 3 கிலோ சத்துமாவு வழங்கப்படுகிறது.
ஒரு வயது நிறைவடைந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு, மாதம் 3 கிலோ சத்து மாவு மற்றும் வாரம் மூன்று முட்டை வழங்கப்படுகின்றன. இதுதவிர, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கூடுதலாக, 60 கிராம் செறிவூட்டப்பட்ட, பிஸ்கட் ஆண்டுக்கு, 300 நாட்கள் வழங்கப்படுகிறது. இவற்றை எல்லாம் ஊழியர்கள் முறையாக வழங்காமல், வெளியில் விற்று காசு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கூறியதாவது:
என் இரண்டு குழந்தைகளும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கன்வாடிகளில் வழங்கப்படும் பொருட்களை பெற, முறையாக பதிவு செய்துள்ளேன். ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு மாதம், 12 முட்டை, 3 கிலோ சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுவது வழக்கம்.
முட்டை வாங்க, வாரத்தின் முதல் மூன்று நாட்களுக்குள் சென்று, கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் சென்றால், முட்டை தீர்ந்து விட்டது என்கின்றனர். இவ்வாறு தாமதமாக வருவோருக்கு வழங்க வேண்டிய முட்டைகளை, வாரந்தோறும் சேமித்து, ஒரு ட்ரே, 100 முதல், 120 ரூபாய் வரை வெளியில் விற்கின்றனர்.
அதேபோன்று, செறிவூட்டப்பட்ட பிஸ்கட் இதுவரை ஒரு முறை கூட வழங்கப்படவில்லை. இதே நிலை தான், தமிழகம் முழுதும் உள்ளது. 3 கிலோ சத்து மாவுக்கு பதிலாக, 2 கிலோ மட்டுமே வழங்குகின்றனர். எனவே, அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களை, ஊழியர்கள் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் சிலர் கூறுகையில், அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும், ஊட்டச்சத்து பொருட்களை, ஊழியர்கள் சந்தையில் விற்பதை தடுக்கவும், பொதுமக்கள் முறையாக பொருட்கள் பெறுவதை உறுதிசெய்யவும், முக அடையாளத்தை வைத்து பயனாளியை அடையாளம் காண உதவும், போஷன் டிராக்கர் செயலி வாயிலாக, பொருட்கள் வழங்கும் நடைமுறையை அறிமுகமாகி உள்ளது.
முதற்கட்டமாக சத்துமாவு, இம்முறையில் வழங்கப்படுகிறது. விரையில், செயலியில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, அங்கன்வாடிகளின் அனைத்து செயல்பாடுகளையும், இச்செயலி வாயிலாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.