இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு முடிவு வெளியீடு
இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமன தேர்வு முடிவு வெளியீடு
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:26 PM
சென்னை:
கடந்த ஆண்டு நடந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கான, நியமன தேர்வு முடிவுகள் வெளியாகின.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தகுதி பெறுவோர் நியமன தேர்வு எழுதலாம்.
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். ஆனால், 13 ஆண்டுகளாக, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கவில்லை.
அதனால், 12,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உருவாகி உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 8,880 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக அரசு அறிவித்தது.
இவற்றில், 2,780 காலியிடங்களுக்கான நியமன தேர்வை நடத்த, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டு, கடந்த ஆண்டு ஜூலை, 12ம் தேதி தேர்வை நடத்தியது. மொத்தம், 25,176 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதில், 1,112 பேர் 100 - 126; 2,798 பேர் 90 முதல் 99; 5,737 பேர், 80 முதல் 89; 7,665 பேர், 70 முதல் 79 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, நியமன தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முடிவில், 2,780 பேருக்கான தேர்வை நடத்தி, நான்காம் ஆண்டில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நியமனம் எப்போது என்று தெரியவில்லை. சான்றிதழ் சரி பார்ப்பு பணியை முடித்து, விரைவில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.