பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 13ல் கலந்தாய்வு துவங்குகிறது
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 13ல் கலந்தாய்வு துவங்குகிறது
UPDATED : ஜூலை 01, 2026 12:21 PM
ADDED : ஜூலை 01, 2026 12:23 PM

சென்னை:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2026 தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களது தரவரிசையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு 53 மாணவர்கள் முழு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தருமபுரியை சேர்ந்த அக்சிதா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டி.என்.இ.ஏ., கலந்தாய்வின் மூலம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாட மதிப்பெண்களின் கட்-ஆப் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களின் குறைதீர் மனுக்கள் பெறும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 20ம் தேதி கலந்தாய்வு துவங்க உள்ளது. மாணவர்கள் தங்களது தரவரிசைக்கு ஏற்ப விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி https://www.tneaonline.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவரிசையை அறிந்து கொள்ளலாம்.
