ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை: மாணவர்களின் அலட்சிய போக்கு
ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை: மாணவர்களின் அலட்சிய போக்கு
UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:35 AM

பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில் ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், மாணவர்களின் அலட்சியப் போக்கு தொடர்வதாக, பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில், ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதன்படி, ஆக., 1ம் தேதி வரை பள்ளிகளில் மாணவர்கள் சேரலாம். அதிலும், காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டால், ஆக., 31ம் தேதி வரை சேர்க்கை தொடரும்.
ஆனால், தற்போது, ஆண்டு முழுதும் கூட அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடியும். ஆன்லைன் வாயிலாகவும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதனை சாதகமாக்கிக் கொள்ளும் சில மாணவர்கள், கல்வியாண்டின் இறுதியில், பள்ளியில் சேர்ந்து தேர்வை எதிர்கொள்கின்றனர். அதேபோல, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு இடம்பெயரும் மாணவர்கள், உடனடியாக பள்ளியில் சேர்வதும் கிடையாது. இத்தகைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அலட்சியப் போக்கு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தொடர்வதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் இன்றி, எந்தவொரு பள்ளியிலும் சேர முடியும். அதற்கு, பிறப்புச் சான்று, ஆதார், தந்தையின் மொபைல்போன் எண் மட்டும் இருந்தால் போதும்.
அதேநேரம், ஆண்டு முழுதும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், ஒரு பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர், அங்குள்ள பள்ளியில் கல்வியாண்டின் இறுதியில் சேர்ந்தாலும், தேர்ச்சி பெறச் செய்ய வேண்டியுள்ளது.
மாணவர் சேர்க்கையை, ஆக., மாதம் வரை நடத்தினால் மட்டுமே உடனடியாக ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேர முனைப்பு காட்டுவர். குறிப்பாக, ஒரு ஆண்டு வீணாகிவிடும் என்ற மனநிலையில் பள்ளியில் சேர வாய்ப்புண்டு.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.