UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:41 AM

ஈரோடு:
தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லுாரி வளாகத்தில், ஈரோடு புத்தக திருவிழா துவங்கியது.
மாநகராட்சி ஆணையர் மணீஷ் தலைமை வகித்தார். புத்தக அரங்கை, பொது நுாலகத்துறை இயக்குனர் இளம்பகவத் திறந்து வைத்தார்.முதல் விற்பனையை தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் மயிலானந்தன் துவக்கி வைத்தார். உலக படைப்பாளர் அரங்கைஎம்.எல்.ஏ., இளங்கோவன் திறந்து வைத்தார். பின்னர் நடந்த மேடை நிகழ்வில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
விழாவில் பொது நுாலகத்துறை இயக்குனர் இளம்பகவத் பேசியதாவது:
நுாலகங்களை முழுமையாக பயன்படுத்தி, புத்தகங்களை முழுமையாக படித்ததால் மட்டுமே, என்னால் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக வர முடிந்தது. தமிழகத்தில் அனைத்து கிளை நுாலகங்களிலும் இந்திய ஆட்சி பணி அதிகாரியை உருவாக்கும் வகையிலான புத்தகங்கள் உள்ளன. மாவட்ட நுாலகங்களில் உள்ள புத்தகங்களை படித்தால், நோபல் பரிசு பெறும் அறிவை பெறலாம்.புத்தகங்கள் படிப்பால் மட்டுமே மனிதன் வாழ்வில் உயர முடியும். பள்ளி படிப்புக்கு பின் கல்லுாரி செல்லாமல், நுாலகங்களை மட்டுமே பயன்படுத்தி இந்திய ஆட்சி பணிக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு பேசினார்.
வரும், 13ம் தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில், காலை, 11:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை புத்தக அரங்கில் பங்கேற்கலாம். தினமும் மாலை, 6:00 மணிக்கு மாலை நேர அரங்கு நிகழ்வு நடக்கிறது. இன்றைய மாலை அரங்க நிகழ்வில், 'நண்பெனும் நாடாச் சிறப்பு' என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார், 'நாடகமும் தமிழிசையும்' என்ற தலைப்பில், டி.கே.எஸ்.கலைவாணன் பேசுகின்றனர்.