தமிழ் வாழ இலக்கியங்கள் போற்றப்பட வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
தமிழ் வாழ இலக்கியங்கள் போற்றப்பட வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:42 AM

விழுப்புரம் :
தமிழின் பெருமையையும், ராமாயணம் போன்ற காவியத்தையும், கம்பன் போன்ற கவியின் எழுத்து புலமையையும் நாம் இளம் தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேசினார்.
41ம் ஆண்டு கம்பன் விழாவை தொடங்கி வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:
இனி வரும் காலங்களில், இளம் தலைமுறையினரிடம் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டும். கம்பராமாயணத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அதனையும், அதன் கவித்துவத்தையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் பண்பாடு, கலாசாரம் மாறாமல், இலக்கிய பொக்கிஷமாக ராமகாவியத்தை கம்பர் படைத்துள்ளார்.
தமிழின் பெருமையையும், ராமாயணம் போன்ற காவியத்தையும், கம்பன் போன்ற கவியின் எழுத்து புலமையையும் நாம், இளம் தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டும். உலகில் பல மொழிகள் இருந்தும், தமிழ் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது.
தமிழன் என பேசும் பலர், அதன் தொன்மையை முதலில் உணர வேண்டும். அதன் பெருமையை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக அதன் பெருமையை பேசாமல், பக்தி இலக்கியம் எனக்கூறி பிரித்தே வைத்து விட்டனர்.
ராமாயணம் பக்தி இலக்கியம்தான். இதனை ஒதுக்கி வைத்தால் தமிழ் எப்படி வளரும். தமிழ் வாழ, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களும் போற்றப்பட வேண்டும். இதற்கு ஆளும் அரசுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு. நம்மை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தும் தமிழை வளர்க்க, மேன்மை பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.

