UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:53 AM
சென்னை:
அரங்குகளை வாடகைக்கு விடும் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் நடைமுறையை பயன்படுத்திக்கொண்டுள்ள திமுகவினர், அங்கு முதல்வரை வைத்து ஈ.வெ.ரா., படத்திறப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வுக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை, பல்கலை வட்டாரங்களில் விசாரித்தபோது அம்பலம் ஆகியுள்ளது.
வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டதும், அப்பல்கலை பி.ஆர்.ஓ., மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். 'ஆக்ஸ்போர்டு' பல்கலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈ.வெ.ராமசாமி படத்திறப்பும் இல்லை' என தெரிவித்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும். அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஆக்ஸ்போர்டு பல்கலையில் நானே அரங்கை வாடகைக்கு எடுத்து, நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளும் இதேபோல் வாடகைக்கு அரங்கை எடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடத்தப்பட்டு உள்ளன.
கடந்த 2013ல், கருணாநிதியின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு, 'கலைஞர் 90' என்ற பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதாக செய்தி, தி.மு.க., தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.
ஆஸ்திரியாவில் 3,000 ரூபாய் செலுத்தினால், யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட்டுக் கொள்ளலாம். அப்படி தான் கருணாநிதியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த உண்மை, அடுத்த சில நாட்களிலேயே வெட்ட வெளிச்சமானது.
ஆஸ்திரிய அஞ்சல் தலை கதை போல், ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ராமசாமி படத் திறப்பு கதையும் உள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. தமிழக மக்கள் மத்தியில் இதுபோன்ற வேடிக்கைகளை செய்வது, திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலிவான அரசியல்
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
ஆக்ஸ்போர்டு பல்கலையே, ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு விழாவை நடத்துகிறது என்பது போன்ற, ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது, மலிவான அரசியல். அந்த பல்கலையில், தனியார் யார் வேண்டுமானாலும், பணம் கொடுத்து, அரங்குகளை, வாடகைக்கு எடுத்து விழாக்களை நடத்திக் கொள்வது வாடிக்கையே. அதேபோன்றதுதான் ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு நிகழ்ச்சியும். இனியும், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தை, தி.மு.க., அரங்கேற்றாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரங்குகளை வாடகைக்கு விடும் பல்கலை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், ஏராளமான அரங்குகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு எடுத்து தனியார் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். அதற்கும், பல்கலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
சிறு கூட்டம், பெரிய விழா, திருமண விழாக்கள், உணவு விருந்துகள், மதுவிருந்துடன் உணவு விருந்து என நடத்தும் வசதிகளை ஆக்ஸ்போர்டு பல்கலை வழங்குகிறது. நமது வசதிக்கு தகுந்தபடி, பல்கலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியக அரங்கு, பல்கலையின் மிகப்பழமையான வகுப்பறை என பல விதமான இடங்களை முன்பதிவு செய்து வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சி நடத்தலாம்.
இப்படி நடக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருவாய்க்காக இப்படி ஒரு ஏற்பாட்டினை ஆக்ஸ்போர்டு பல்கலை செய்து கொள்கிறது. 'அத்தகைய ஒரு நிகழ்ச்சி தான், திமுகவினர் ஏற்பாடு செய்துள்ள ஈவெரா படத்திறப்பு. அதை ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைத்து பொய்யான தற்பெருமை பேசித்திரிகின்றனர்' என்கின்றனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.