திறந்தநிலை பல்கலை தேர்வுகளில் குளறுபடி தேர்வெழுதிய மாணவர்கள் குற்றச்சாட்டு
திறந்தநிலை பல்கலை தேர்வுகளில் குளறுபடி தேர்வெழுதிய மாணவர்கள் குற்றச்சாட்டு
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:53 AM

சென்னை:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நடத்தும் செமஸ்டர் தேர்வுகளில், தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஜூனில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் மிகவும் தாமதமாக கடந்த மாதம் 23ம் தேதி துவங்கின. இம்மாதம், 9ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. அடுத்த தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க வேண்டும்.
தற்போது நடக்கும் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தி முடிக்க நவம்பர் வரையாகும் என்பதால், தேர்வு முடிவு டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதுவரை, அரசு கல்லுாரிகளில் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேர்வு மையங்களுக்கும், தேர்வு துறைக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், போதிய அறைகள் ஒதுக்கப்படுவதில்லை. பல இடங்களில் பள்ளி வளாகங்களில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் சிரமப்பட்டு தேர்வு எழுதி உள்ளனர்.
அதேபோல, தேர்வுகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செலவுத்தொகை சரியாக வழங்கப்படாததால், அவர்கள் தொடர்ந்து தேர்வுகளை நடத்த முன் வரவில்லை.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், புத்தகம் வழங்குவது முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது வரை தொடர்ந்து சொதப்பலாகவே உள்ளது. தேர்வு நெருங்கும் வரை புத்தகங்களை அச்சடித்து வழங்கவில்லை. இணையவழி புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என்றனர்.
கடந்த ஆண்டு இளநிலை படிப்பில் சேர்ந்து, இரண்டாவது செமஸ்டர் தேர்வு எழுதியோருக்கு, மூன்றாவது செமஸ்டர் தேர்வு எழுதியதாக மதிப்பெண்கள் வந்துள்ளன.
எழுதாத தேர்வுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவர் என்பது தெரியவில்லை. முதலாம் ஆண்டு மாணவர், இரண்டாம் ஆண்டு தேர்வை எப்படி எழுத முடியும் என, நிர்வாகம் யோசிக்கவில்லை. இது, பல்கலையின் மீது, நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பல்கலை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தேர்வு நடத்தும் பணி முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒருங்கிணைப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. புகார் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புத்தகங்கள் வழங்க அரசு அனுமதி அளிக்காததால், காலதாமதம் ஏற்பட்டது. தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டது குறித்து மாணவர்கள் புகார் அளித்தால், உரிய திருத்தங்கள் செய்யப்படும்.
மாணவர்களின் புகார்கள் மீது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.