நிலவில் விவசாயம் செய்யும் காலம் வரும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேச்சு
நிலவில் விவசாயம் செய்யும் காலம் வரும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பேச்சு
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 08:27 AM

ஈரோடு:
மக்கள் சிந்தனை பேரவை வெள்ளிவிழாவை ஒட்டி, இரண்டு நாள் நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று துவங்கியது. சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார்.
இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசியதாவது:
ஒரு மனிதன் சிந்தனையால் தான் செழுமை பெற முடியும். 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் தனித்துவமான சிந்தனை காரணமாக கலை, பண்பாடு, மொழி, தொழில்நுட்பத்தில் மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டது. மனிதனின் இந்த விரிவான சிந்தனைக்கு காரணம் மொழி. மொழியின்றி நாம் சிந்திக்க முடியாது. அதனால்தான் நுண்ணறிவை பெற்று, உலகத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றுள்ளான். எனவே சிந்திப்பதை மனிதன் ஒருபோதும் நிறுத்தக்கூடாது. உயர்ந்தவற்றை சிந்திக்கும் போது வாழ்க்கை வளமாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
பணியில் இருந்து நான் ஓய்வு பெற்றிருந்தாலும், அறிவியல் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நவீன விஞ்ஞானம் மூலம் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலவில் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆராயப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. விவசாயிகளின் அடுத்த தலைமுறை, நிலவில் விவசாயம் செய்யும் நிலை உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை சிறப்புநிலை பேராசிரியர் நரேந்திரன், முன்னாள் இஸ்ரோ துணை இயக்குனர் இளங்கோவன், நடிகர் சிவக்குமார், தொழிலதிபர்கள் சின்னசாமி, கிருஷ்ணமூர்த்தி, தங்கவேலு, பாலுசாமி, தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.