தசரா விடுமுறையில் தேர்வு: கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
தசரா விடுமுறையில் தேர்வு: கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
UPDATED : அக் 13, 2026 09:37 PM
ADDED : அக் 13, 2026 09:37 PM
மங்களூரு:
தசரா விடுமுறையில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லுாரி முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தட்சிண கன்னடாவின் மங்களூரு டவுன் பெண்டூர் பகுதியில், செயின்ட் ஆக்னஸ் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, நேற்று முதல் 28ம் தேதி வரை நடக்க இருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் கல்லுாரியின் நுழைவுவாயில் முன்பு கூடிய, நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் தசரா விடுமுறையின் போது தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி., மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று, கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த கத்ரி போலீசார், மாணவர்களிடம் பேச்சு நடத்தி, தேர்வுக்கு செல்லும்படி கூறினர். இதற்கு ஏ.வி.பி.வி., மாணவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுாரி மாணவ - மாணவியர், போலீஸ் ஜீப்பை மறித்து போராடினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் கூறுகையில், 'அனைத்து பள்ளி, கல்லுாரிக்கும் தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மட்டும் தசரா விடுமுறையில் தேர்வு நடத்துகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கின்றனர். நாங்கள் எங்கள் பண்டிகையை கொண்டாட வேண்டாமா. விடுமுறை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. வரும் 19, 22ம் தேதிகளில் நடக்கும் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்' என்றனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கல்லுாரி நிர்வாகம் 19, 22ம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகளை ஒத்திவைத்தது.
இதுகுறித்து கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் சுபரேகா கூறுகையில், ''தேர்வு நடக்கும் தேதி குறித்து கடந்த மாதம் 11ம் தேதி அறிவிப்பு வெளியிட்டோம். ஏதாவது ஆட்சேபனை இருந்தால், தேர்வு பதிவாளரிடம் கூறும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் எதுவும் கூறாமல், இப்போது வந்து போராட்டம் நடத்துகின்றனர். இது அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு தேர்வுகளை ஒத்திவைத்து உள்ளோம்,'' என்றார்.
