தேர்வு முடிவுகள்... மதிப்பெண்கள்... வாழ்வின் முதல் படி தான், அதுவே முடிவு அல்ல
தேர்வு முடிவுகள்... மதிப்பெண்கள்... வாழ்வின் முதல் படி தான், அதுவே முடிவு அல்ல
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:03 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில், பெற்றோர்களும் அச்சமடைந்து, தங்கள் பிள்ளைகளையும் பயமுறுத்தி, வாழ்க்கையே மதிப்பெண்கள்தான் என்பதுபோல மன அழுத்தம் கொடுக்கின்றனர். இந்நேரத்தில் மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்ட வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை என்கின்றனர் கல்வியாளர்கள்.
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளரும், எழுத்தாளருமான அரிமதி இளம்பரிதி:
பிளஸ் 2ல் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் கல்லுாரி கல்வியை தொடர எண்ணற்ற புதிய பட்டப்படிப்புகள் உள்ளன. தோல்வியடைந்தவர்களும் துளியளவும் வருத்தப்பட வேண்டியதில்லை.
காரணம், ஒரு ஆண்டும் வீணாவதில்லை. இதே கல்வியாண்டில் கல்லுாரி கல்வியை தொடர முடியும். எனவே, தன்னம்பிக்கையோடு முயற்சித்தால் மிக சிறந்த மதிப்பெண்களை பெற முடியும்.
தோல்வியோ, வெற்றியோ எதுவும் நிரந்தரமில்லை என்பதே யதார்த்த உண்மை. இதை மாணவர்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு.
பிள்ளைகளின் மதிப்பெண்களை அடுத்தவர்களோடு ஒப்பீடு செய்யக் கூடாது. மாணவர்கள் மனதில் நம்பிக்கையூட்டுவதும், நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதுமே சிறந்த பெற்றோர்களுக்கான இலக்கணம். மாணவர்களிடம் நிரம்பியுள்ள மனித வளத்தை மதிப்பெண்களால் அளவிட முடியாது.
தாகூர் கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜன்:
தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. எந்த நிலையில் நாம் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அது நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் தற்போது நடத்தப்படுகிறது. விரைவில் துணை தேர்வில் வெற்றி பெற்று சாதிக்கலாம்.
மருத்துவம், இன்ஜினிரியங் படிப்புகள் மட்டுமே வாழ்க்கை அல்ல. மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு கலை அறிவியல் போன்று பல்லாயிரக்கணக்கான பட்டய, பட்டப்படிப்புகள் இந்தியாவில் உள்ளன. அனைத்துக்குமே எதிர்காலம் சிறப்பாகவே உள்ளது. எனவே வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் பெரியாண்டி:
பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக மாறி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேச வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உற்சாகத்தை வழங்கும் சக்தி பெற்றோர்களுக்கே உண்டு.
தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும், வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் வாழ்வின் வெற்றியை அது நிர்ணயிக்காது. தேர்வு முடிவுகள், தேர்வின் மதிப்பெண்கள் வாழ்வின் முதல்படிதான். அதுவே வாழ்வின் முடிவு அல்ல.
எனவே, பிளஸ் 2 என்பதை மேற்படிப்பிற்கான ஒரு படிக்கட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். மதிப்பெண்ணை மட்டுமே பிரதானமாக பார்க்க வேண்டாம். இந்த அடிப்படை உண்மையை, பெற்றோரும், மாணவர்களும் புரிந்து கொண்டு அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி செல்லும் நேரம் இது.
-நமது நிருபர்--